அடையாளம்

Updated: Dec 1, 2019


மனிதன் என்ற அடையாளம் தொலையாமல் இருந்திருந்தால் இரு மொழிகள் சந்திக்க கருவிழிகள் விரிந்தபடி இத்துணை அழகான சிக்கலா மனித இனம்

என்று மலர்ந்த முகத்தில் புன்னகை பூத்திருக்கும்

உன் மொழி என் மொழி என்று பெருமை பேசாமல் இலையில் ஒட்டாத புனித பனித்துளிபோல் மொழியைத் தனியாக ஒரு தவத்தின் வரமாக வியந்து பார்த்திருக்கும்


மனிதன் என்ற அடையாளம் தொலையாமல் இருந்திருந்தால் இரு வேறு நிறம் கொண்ட மனிதர்கள் சந்திக்க என்னைப் போலவே எத்தனை ஒற்றுமை என்பதுதான் முதல் மணியாய் ஒலித்திருக்கும் என்னைப் போலவே நீ உன்னைப் போலவே நான் எனக்குப் பசிப்பதுபோல் உனக்கும் பசிக்கிறது எனக்கு வலிப்பது போல் உனக்கும் வலிக்கிறது


எத்தனை எத்தனை நிறங்கள் இருந்தாலும் அத்துணை முகத்தினிலும் இறைவனின் கையொப்பம் பளிச்சென்று தெரிகிறது மனித இனம் பற்றி மாளாத வியப்பொன்று மனதின் அடித்தளத்தில் வியாபித்து நிறைந்திருக்கும்


மனிதன் என்ற அடையாளம் தொலைந்ததினால் அடையாளப்படுத்திக்கொள்ள அலைகிறான் அறிவிழந்து மொழியைப் பிடித்தவண்ணம் வழியைத் தேடுகிறான் ஜாதி கரம் பிடித்து பாதை நாடுகிறான் நிறம், மதம் என்று இப்படிப் பல வகைகள் இந்த ஊர் சேரா பாதையில் சிதைந்து விடும் சிலர் கதைகள்


மனிதனின் பயம் தானே அடையாள தேடல் அது ஆழ்மனதில் தீயாய் எரிகிறது பேயாக அலைகிறது பிறர்க் கொன்று குவிக்கிறது பகிர்தல் பரவசம் என்ற உண்மையை கண்முன் வராமல் தடுக்கிறது


எனக்கு எனக்கு என்று எடுத்து மறைத்து வைத்து ஒருவனைக் கொன்று நீ உண்பதெல்லாம் கல்லறை மேல் சாப்பாடு


மொழி, நிறம், வளர்ப்பு, பிறப்பு இவை எல்லாம் உன் உண்மை அடையாளமல்ல அவை உன் சிறப்பு நீ மனிதன் என்பது தான் உன் உண்மை அடையாளம் தொலைத்து விடாதே பின் பொய் கடலில் தொலைந்து போவாய்


விரிசல் என்பது தேய் பிறை போல் கிடையாது அது வேர்பிடித்து வளர்ந்து வரும் அது தேசம் மாநிலம் மொழியோடு நிற்காது உன் கூட்டம் குடும்பம் தனி மனித வாழ்க்கைவரை சில்லு சில்லாய் உடைக்காமல் கண் மூடி உறங்காது


நீ விரிசலை விதைத்து நீர்ப் பாய்ச்சி வளர்த்து வந்தால் அதைப் பல மடங்கு அறுத்திடுவாய் விரைவாய் விழித்துக்கொள்

பகிர்தல் விதைத்துப் பார் அன்பை வளர்த்துப் பார் நன்மை கோடி உன்னை சூழாமல் போகாது


மனிதா கருவறையில் உனக்கிருந்த பேதமற்ற வெளிச்சத்தை மனுவுலகில் வந்தவுடன் நொடியில் தொலைக்காதே

- ஸ்டெல்லா

85 views0 comments

Recent Posts

See All