அப்பா என்ற மாற்றம்
Updated: Jul 29, 2022

நான் கருவறை துறந்த நாள் முதலாய் ‘நான் நான்’ என்றடித்த என் இதயம்நீ கருவறை தாண்டிஎன் கையில்தேங்கியபோது‘நீ நீ ‘என நொடியில் மாற்றம்
சீறிப் பாயும் காளையாய் இருந்தேன் அன்பின் ஆழம் அனைத்தும் அடக்கிய அன்னையின் கைக்கும் அடங்கியதில்லை ஆனால் தத்தி நடக்கும் உன் பிஞ்சு பாதங்கள் என்னைக் கட்டி வைக்க வேகம் குறைத்தேன் விவேக மாற்றம்
முகத்தில் முறைப்பு தலையில் கர்வம் என் வாகனம் எப்போதும் மின்னல் வேகம் அறிவுரை வந்து எட்டும் முன்னே அரைக் காத தூரம் தாண்டியிருப்பேன் ஆனால் உன் மழலை மொழியை என் காது சுவைத்தபின் 'கவனம் கவனம் 'என என் பயணத்தில் மாற்றம்
என்னைப் பகடி செய்தால் பற்கள் உடையும் தேடிப் பிடித்து பாடம் புகட்டும் வாள் போன்ற வார்த்தைகள் வம்புகள் வாங்கும் இது என் இயல்பு என்று நினைத்திருந்தேன் ஆனால் உன் பலமில்லாத சின்ன விரல்கள் என்னை இழுத்து இடம் மாற்றியது உன் பொக்கைவாய் சிரிப்பில் விழுந்தவன் எழும்ப மனமில்லை பொறுமை கற்றுக்கொண்டேன்
ஓரிடத்தில் என்னை கட்டிவைப்பது கடந்த காலத்தில் சாத்தியமில்லை நீ கண்மூடி என் கையில் உறங்க என் கால் விரல் கூட அசைவது இல்லை என் மேல் விழுந்து சிரித்துப் பேசி விளையாடி மகிழ்ந்து நீ அயர்ந்து சொக்கி கண்கள் மூட இறைவா என் மேல் ஏன் இவ்வளவு இரக்கம் இவ்வளவு மகிழ்ச்சியை சின்ன பொட்டலமாக்கி எனக்குத் தந்தாயே என்று மனம் இசைத்தது
வேகம் இப்போது விவேகமானது கர்வம் மாறி கவனம் சேர்ந்தது சோக கதைகள் மறந்து போனது வாழ்க்கையை வேறு வெளிச்சத்தில் பார்க்கிறேன் நான் ஓடி உழைக்க ஒரு இனிய காரணம் வாழ்க்கையைப் பார்த்து களிக்க ஒரு புதிய சாளரம் இன்னும் கூட நிறைய மாறனும் இந்த மாற்றம் அழகு அழகு என்பேன்
-ஸ்டெல்லா இசக்கிராஜ்