ஆன்டன் செக்கோவின் நாகரிகமான மனிதனுக்கான அளவுகோல்கள்

Updated: Jul 30




ஒரு நாகரிகமான அல்லது பண்பட்ட மனிதன் பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன்:

1. பண்பட்ட மனிதர்கள், தனி மனிதர்களை மதிப்பார்கள், எனவே அவர்கள் எப்போதும் கனிவானவர்களாக, மென்மையானவர்களாக, கண்ணியமானவர்களாக, மற்றவர்களிடம் பணிவாய் நடந்துகொள்கிறார்கள். சிறிய தவறுகளை அவர்கள் பெரிது படுத்த மாட்டார்கள். அவர்கள் யாரிடமாவது நெருங்கி வர நேர்ந்தால், அவர்கள் அதை அவர்களுக்கு செய்யும் பெரிய உதவியாகக் கருதுவதில்லை, அவர்களை விட்டுச் செல்ல நேர்ந்தால், "உங்களுடன் யாரும் வாழ முடியாது" என்று கூறி செல்லமாட்டார்கள். அவர்கள் சத்தங்களையும், பகடிகளையும், ஆறிப்போன உணவுகளையும், வீட்டிற்குத் தெரியாதவர்கள் வந்தாலும், பொறுத்துக் கொண்டு மன்னிக்கிறார்கள்.


2. பண்பட்ட மனிதர்கள் பிச்சைக்காரர்கள் மற்றும் பூனைகள் மீது மட்டும் அனுதாபப்படுவதில்லை. முகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத சோகங்களை நினைத்து அவர்கள் இதயம் வருந்தும், அதைக் குறித்து ஏதேனும் உதவி செய்யவோ சரி செய்யவோ முயல்வார்கள்.


3. அவர்கள் மற்றவர்களின் சொத்துக்களை மதிக்கிறார்கள், அதனால் தங்கள் கடன்களைச் செலுத்துகிறார்கள்.


4. அவர்கள் நேர்மையானவர்கள், நெருப்பைக் கண்டு அஞ்சுவது போலப் பொய் பேச அஞ்சுவார்கள். சிறிய விஷயங்களில் கூட பொய் சொல்ல மாட்டார்கள். ஒரு பொய் கேட்பவரை அவமானப்படுத்துகிறது மற்றும் பொய் பேசுபவன் அவன் பார்வையிலேயே மிகவும் தாழ்ந்து போகிறான். அவர்கள் தங்களைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்கள், வீட்டில் இருப்பது போல் வெளியிலும் நடந்து கொள்கிறார்கள், அவர்கள் மற்றவர்களிடம் எதை வேண்டுமானால் பேசவோ அல்லது தன்னுடைய நம்பிக்கைகளைத் திணிக்கவோ மாட்டார்கள். மற்றவர்களின் மீது மரியாதை செலுத்துவதால், அவர்கள் பேசுவதை விட அமைதியாகக் கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள்.


5. அனுதாபத்தைத் தூண்டும்வகையில் அவர்கள் பேசுவதேயில்லை. மற்றவர்கள் மன உணர்வுகளைத் தூண்டி அனுதாபத்தையோ அல்லது புகழையோ பெற முயல மாட்டார்கள். "நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன்" அல்லது "நான் இரண்டாம் தரமாகிவிட்டேன்" போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதை அவர்கள் தவிர்க்கிறார்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது அற்பமான, பொய்யான மற்றும் ஒரு மலிவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.


6. அவர்களுக்கு மேலோட்டமான மாயை இல்லை. அவர்கள் நேரத்தை வீணாக்குவதில்லை.

பிரபலங்களுடன் பழகுவது, கைகுலுக்குவது, பொதுவான இடங்களில் தன்னை மிகவும் பிரபலமாக்கிக்கொள்வது போன்ற போலித்தனமான விடயங்கள் அவர்கள் செய்வதில்லை. ஒரு பைசா மதிப்புள்ள வேலை செய்தால், நூறு ரூபாய் மதிப்புள்ள வேலை செய்ததைப் போல அவர்கள் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மற்றும் மற்றவர்கள் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு தாங்கள் அனுமதிக்கப்படுவதைத் தற்பெருமையோடு சொல்லிக்கொள்ள மாட்டார்கள். உண்மையான திறமையானவர்கள் எப்போதும் சுயவிளம்பரம் செய்து கொள்வதில்லை.


7. அவர்களிடம் திறமை இருந்தால் அதை பெரிதும் மதிப்பார்கள். அதனால் அவர்கள் தேவையற்ற ஓய்வு, பெண்கள், மது என்று வீண் விரயம் செய்வதில்லை. ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திடக் கூடாது என்ற பொறுப்போடு நடந்து கொள்வார்கள். மிகக் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் வாழ்வதில் கவனம் செலுத்துவார்கள்.


8. தங்களுக்குள் அழகியல் உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் உலகம் அலங்கோலமாய், அழுக்காய், அருவருப்பாய் இருக்க அதை அப்படியே ஏற்று அதற்குள் அவர்கள் வாழ்வதில்லை. அவர்கள் தங்கள் உள்ளுணர்வையும், மன கிளர்ச்சியையும் கட்டுப்படுத்தவும் மேம்படுத்தவும் முடிந்தவரை முயல்கிறார்கள்.


- ஆன்டன் செக்கோவ்

From Anton Chekhov's letter to Nikolai Chekhov, March 1886

Translated by Stella Esakkiraj


0 comments