இழப்பு
இழப்பு என்னும் ஆசான் எவ்வளவு கடுமையானவராக இருந்தாலும், பாடம் கற்றுத்தர ஒரு போதும் தவறுவதில்லை. பணம் பொருள் இழப்பு வலித்தாலும் நம்மை மேலும் வலுப்பெறவே செய்கின்றன. ஆனால் மனிதர்களை இழக்கும்போது, அது மனிதத்தைத் தூண்டிவிடுகிறது, வாழ்க்கையின் புரிதலை மேம்படுத்துகிறது, உண்மை தேடலைத் தொடங்குகிறது, புதிரும் புதிரின் விடையும் ஒரே நேரத்தில் பிரசவித்தது போன்ற உணர்வில் ஆழ்த்துகிறது. மனிதர்களையும் அன்பையும் தவிர வேறொன்றும் பெரிதில்லை என்ற தவ நிலை சில கணங்களாவது மனதில் தேங்கி பின் வற்றிப்போகிறது. இன்னும் பேசியிருக்கலாம், சிரித்திருக்கலாம், பகிர்ந்திருக்கலாம், நேரம் ஒதுக்கியிருக்கலாம், அமைதியாய் பேசவிட்டுக் கேட்டிருக்கலாம் என்று இதயம் பிரசங்கம் செய்யக் கண்கள் வலுவிழந்து விடும் கண்ணீரைச் சேகரித்து வையுங்கள். இப்போது உயிரோடிருக்கும் உறவுகளையும், நண்பர்களையும் நினைவில் கொள்ளுங்கள். - ஸ்டெல்லா இசக்கிராஜ்
